மகா கும்பமேளாவால் மாநிலத்திற்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது - யோகி ஆதித்யநாத்

  தினத்தந்தி
மகா கும்பமேளாவால் மாநிலத்திற்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது  யோகி ஆதித்யநாத்

லக்னோ, உத்தரபிரதேச மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய கேள்வி நேரத்தின்போது சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ராகிணி சோங்கரின் கேள்விக்கு பதில் அளித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-இந்தியா ஒருபோதும் வளர்ந்த நாடாக மாற முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. 2027-ம் ஆண்டில் அதைவிட உயர்ந்த நிலைக்கு இந்தியா செல்லும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்காக 140 கோடி இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும். சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம், ஏனென்றால் அவர்கள் நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உத்தரபிரதேச மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலராக உயர்த்த (இந்திய மதிப்பில் சுமார் ரூ.86 லட்சம் கோடி) கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக 10 துறைகளில் திட்டங்களை வகுத்துள்ளோம். தற்போது நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வால் மாநிலத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் வருவாய் உயர்ந்துள்ளது.பிரதமர் மோடியின் தலைமையில், 10 ஆண்டுகளில், 25 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்டுள்ளோம் என்பதில் நாம் பெருமைப்பட வேண்டும், மேலும் கடந்த எட்டு ஆண்டுகளில், எங்கள் அரசாங்கம் ஆறு கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது. இது ஒவ்வொரு துறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறதுஇவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை