ரோகித்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் - விராட் கோலிக்கு இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்

  தினத்தந்தி
ரோகித்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்  விராட் கோலிக்கு இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்

மும்பை, 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளன. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.சமீப காலங்களாக பார்மின்றி தவித்து வந்த நட்சத்திர வீரரான விராட் கோலி இந்த தொடரிலாவது மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் 38 பந்துகளை எதிர்கொண்ட அவர் 22 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் எதிர்வரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மீண்டும் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.இந்நிலையில் தற்போது சுமாரான பார்மில் இருக்கும் விராட் கோலி பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்பதற்காக கடினமாக விளையாடுவதாக இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். எனவே பாரத்தை எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக விளையாடினாலே அவரால் அசத்த முடியும் என்று கும்ப்ளே கூறியுள்ளார். இதே போல தடுமாற்றமாக இருந்த ரோகித் சர்மாவை எடுத்துக்காட்டாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-"விராட் கோலி போல நானும் தடுமாற்றமான காலங்களில் இருந்துள்ளேன். எனவே அதைப்பற்றி பேசலாம். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விராட் கோலி இவ்வளவு காலம் தடுமாற்றமாக விளையாடியதில்லை. அவர் தற்போது அதிகமாக முயற்சிக்கிறார் என்று நான் உணர்கிறேன். அனைவரும் வெற்றியை நீங்கள் பறிக்கக்கூடிய வீரர் என்று உங்களை சொல்கிறார்கள். அவர் நம்முடைய அணியின் முக்கியமான நபர். அது போன்ற அழுத்தம் இருக்கும்போது அதை பூர்த்தி செய்வதற்காக திடீரென நீங்கள் அனைத்து முக்கியத்துவத்தையும் விட்டுவிட்டு கடினமாக முயற்சிக்க செய்வீர்கள். அதை செய்யும்போது நீங்கள் ரிலாக்ஸாக இருக்க முடியாது.கொஞ்சம் அதிகமாக கடினமாக முயற்சிக்கிறார் என்பது அவர் விளையாடிய விதத்தில் பார்க்க முடிந்தது. ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டியதில்லை. ரோகித் சர்மாவை பாருங்கள். அவர் இங்கே வந்து சுதந்திரமாக விளையாடுகிறார். ஏனெனில் நமது அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் இருப்பதுடன் அனைவரும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். அதே போல விராட் கோலியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாட வேண்டும்.அனைத்து வீரர்களுமே இது போன்ற சூழ்நிலைகளை தங்களது கெரியரில் கடந்து வந்திருப்பார்கள். ஆனால் விராட் கோலி கொஞ்சம் தமக்குத் தாமே அதிக அழுத்தத்தை போடுகிறார் என்று நினைக்கிறேன். அதை செய்யாமல் களத்திற்கு சென்று முடிவைப் பற்றி கவலைப்படாமல் சுதந்திரத்துடன் தனது இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளக்கூடிய கோலி பார்மில் இருக்கும்போது சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றுவார். ஆனால் தற்போது அதை செய்யாத அவர் ரன்கள் குவிப்பதற்கு அதிகமாக முயற்சிக்கிறார்" என்று கூறினார்.

மூலக்கதை