பெங்களூரு: ஓட்டல் மாடியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது

பெங்களூரு,கர்நாடக மாநிலம் கோரமங்கலாவில் உள்ள ஒரு ஓட்டலில் 33 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான புகாரின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வேலைக்காக சென்றிருந்தபோது சுமார் 20 வயது மதிக்கத்தக்க 4 பேர் அந்த பெண்ணை அணுகி இரவு உணவு சாப்பிட அருகில் உள்ள ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளனர். பின்னர் ஓட்டலின் மாடிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி, அதிகாலை 6 மணிக்கு அந்த பெண்ணை விடுவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பியவுடன் தனக்கு நடந்தது குறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய மற்றொரு நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் அனைவரும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஓட்டல்களில் வேலை செய்து வந்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூலக்கதை
