அமெரிக்க நிதி விவகாரம்: ராகுல் காந்தியை துரோகி என விமர்சித்த பாஜக

  தினத்தந்தி
அமெரிக்க நிதி விவகாரம்: ராகுல் காந்தியை துரோகி என விமர்சித்த பாஜக

புதுடெல்லி,அமெரிக்காவில் புதிதாக அமைந்த டிரம்ப் அரசின்கீழ் செயல்படும் அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை அமைப்பின் தலைவராக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உள்ளார். அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. அந்த வகையில், பிற நாடுகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த நிதியுதவியையும் அத்துறை ரத்து செய்து வருகிறது.இந்த நிலையில், இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட 21 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.182 கோடி) நிதியுதவியை, அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (DOGE) ரத்து செய்தது. இதுதொடர்பாக பாஜக - காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மோதல் நிலவியது. "இந்திய தேர்தல்களில் அமெரிக்காவுக்கு என்ன வேலை" என கேள்வி எழுப்பிய பாஜக, இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை குற்றஞ்சாட்டியது. இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது. போதாக்குறைக்கு இந்தியாவில் ஆட்சிமாற்றத்தை விரும்பிய முந்தைய பைடன் நிா்வாகம், அந்நாட்டில் வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்க அரசு நிதியுதவியை வழங்கியிருப்பதாக கருதுகிறேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்து பாஜக- காங்கிரஸ் இடையேயான வார்த்தை யுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பட்டியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2004-13 ஆம் ஆண்டு வரை அப்போதைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2000 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை இந்தியாவிற்கு நிதியாக வந்துள்ளது. மோடி ஆட்சி காலத்தில் வெறும் 1.5 மில்லியன் தான் வந்துள்ளது. ஏனெனில், எந்த ஒரு அந்நிய சக்திகளிடமும் இந்தியாவின் நலனை மோடி விற்க மாட்டார் என்று அவர்களுக்கு (அமெரிக்கா) தெரிந்து இருக்கிறது.இந்தியாவை பலவீனப்படுத்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்த ராகுல் காந்தி ஒரு துரோகி. இந்திய அரசுக்கான நிதி நிறுத்தப்பட்டதும், பாரத் ஜோடோ யாத்திரை காலத்தில் என்.ஜி.ஓக்களுக்கான நிதி அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தியை பலப்படுத்தி, மோடியை தோற்கடிக்கும் முயற்சியாக இது நடைபெற்றுள்ளது" என்றார்.

மூலக்கதை