சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர்: இலங்கையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற இந்தியா

  தினத்தந்தி
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர்: இலங்கையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற இந்தியா

மும்பை, ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்களுக்கான முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் நேற்று தொடங்கியது. இந்தியாவின் மும்பை, ராய்பூர் மற்றும் லக்னோ ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் தொடக்க நாளான நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சச்சின் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணி, குமார் சங்கக்கரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ராயுடு (5 ரன்கள்), சச்சின் (10 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய குர்கீரத் சிங் (44 ரன்கள்), ஸ்டூவர்ட் பின்னி (68 ரன்கள்), யுவராஜ் சிங் (31 ரன்கள்), யூசுப் பதான் (56 ரன்கள்) அதிரடியாக விளையாடினார். இதன் மூலம் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் குமார் சங்கக்கரா ஒருபுறம் போராட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. அவரும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் ஜீவன் மெண்டின் (42 ரன்கள்), இசுரு உதான (23 ரன்கள்) அதிரடியாக விளையாட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இலங்கை வெற்றி கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரை வீசிய இந்தியாவின் அபிமன்யூ மிதுன் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் இர்பான் பதான் 3 விக்கெட்டுகளும், குல்கர்னி, மிதுன் மற்றும் வினய் குமார் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஸ்டூவர்ட் பின்னி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மூலக்கதை