திடீரென மயங்கி சரிந்த உரிமையாளர்; முன்பே உணர்ந்து, உதவிய நாய்... வைரலான வீடியோ

  தினத்தந்தி
திடீரென மயங்கி சரிந்த உரிமையாளர்; முன்பே உணர்ந்து, உதவிய நாய்... வைரலான வீடியோ

நியூயார்க்,ஆபத்து காலத்தில் உதவும் சிறந்த நண்பனாக, நன்றிக்கு எடுத்துக்காட்டாக நாய்கள் விளங்குகின்றன. அது, தன்னை வளர்க்கும் உரிமையாளருக்கு மட்டுமின்றி, அவருடைய குடும்பத்தினரை பாதுகாக்கும் செயலை செய்கிறது.அதனுடைய பாதுகாப்பை கூட கவனத்தில் கொள்ளாமல், உரிமையாளரை எந்த தருணத்திலும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக செயல்படுகிறது. அதனால், பலரும் தங்களுடைய வீடுகளில் அவற்றை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.அதிலும், சில நாய்கள் புத்திசாலித்தனத்துடன் உரிமையாளருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே, அதனை உணர்ந்து அதற்கேற்ப செயல்படும் திறன் படைத்தது. இதுபோன்ற செல்ல பிராணி ஒன்று உரிமையாளர் திடீரென உடல் நலம் குன்றி, மயக்கமடைந்து சரிய இருந்தபோது, அவருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாத்துள்ளது. அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.நாயின் உரிமையாளரான அந்த பெண், வீட்டின் சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, அவருக்கு மயக்கம் ஏற்பட போகிறது என முன்பே தெரிந்து, பெய்லி என்ற அந்த வளர்ப்பு நாய், துரித கதியில் செயல்பட்டு அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது.அவரை வேலை செய்ய விடாமல் தடுத்து, தரையில் மெல்ல அமர செய்கிறது. பின்னர், ஓடி சென்று குளிர்சாதன பெட்டியை திறந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து அவரிடம் கொடுக்கிறது. பொறுப்புடன் மீண்டும் சென்று, அதன் கதவை மூடி விடுகிறது.இதன்பின்பு அவருக்கு வேண்டிய மருந்துகளை சமையலறையில் ஒவ்வோர் இடத்திற்கும் சென்று தேடுகிறது. ஒரு வழியாக, அதனை தேடி பிடித்து, எடுத்து வந்து கொடுக்கிறது. அதனை பெற்று கொண்ட பின்பு, அவருக்கு தைரியம் வருகிறது. பெய்லி, அந்த பெண்ணின் பக்கத்திலேயே அமர்ந்து, அவருக்கு ஆறுதல் தரும் வகையில் செயல்படுகிறது. அவரை தழுவி கொள்கிறது.அவர் மருந்து எடுத்து கொண்டதும், அவரை படுக்க செய்வதற்கான முயற்சியையும் மேற்கொள்கிறது. உடல் சோர்வால் படுக்க முற்படும் அவரை பாதுகாப்பாக படுக்க உதவுகிறது.இதுபோன்ற செல்ல பிராணிகளுக்கு, உரிமையாளருக்கு உடல்நல பாதிப்பு எப்போது ஏற்படும் என முன்பே தெரிந்து, அதற்கேற்ப, அவருக்கு ஏதேனும் ஏற்படுவதற்கு முன்னரே எச்சரிக்கையுடன் செயல்பட்டு, பாதுகாக்கும் பணியை திறம்பட செய்கிறது.உலக அளவில், இந்த வீடியோ பலரையும் கவர்ந்து உள்ளது. உடல், மன பாதிப்புகளை கொண்டிருப்பவர்களுக்கு உதவிகளை செய்வதற்காகவே இதுபோன்ற செல்ல பிராணிகள் நன்றாக பயிற்சி பெறுகின்றன. அவை உரிமையாளரின் உடல் பாதிப்புகளை முன்பே அறிந்து கொண்டு, அதற்கேற்ப, அவருக்கு பாதிப்பு ஏதேனும் நிகழ்வதற்கு முன்னரே முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் திறன் பெற்றுள்ளது.இதனால், பலரும் பெய்லியை புகழ்ந்து வருகின்றனர். பெய்லியை, கடவுள் அனுப்பி வைத்தது என்றும் ஏஞ்சல் என்பதற்கு சரியான விளக்கம் இது அல்லவா? என்றும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர், நாயின் உடலுடன் கூடிய மனிதன் என்றும் புனித பசு என்றும் ஆச்சரியம் தருகிறது என்றும் தெரிவித்து உள்ளனர்.A post shared by Katie and Bailey (@serviceaussiebailey)

மூலக்கதை