இந்திய ராணுவ தலைமை தளபதி பிரான்ஸ் நாட்டில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்

  தினத்தந்தி
இந்திய ராணுவ தலைமை தளபதி பிரான்ஸ் நாட்டில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்

புதுடெல்லி,இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி, இன்று பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். அந்த நாட்டில் அவர் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து இந்திய ராணுவ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா, பிரான்ஸ் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையேயான மூலோபாய கூட்டமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு ராணுவ தலைமை தளபதி திவேதி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பாரீஸ் நகரில் பிரான்ஸ் ராணுவ தலைமை தளபதி பியர் ஷில்லுடன் உபேந்திரா திவேதி விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தொடர்ந்து பாரீசில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்று பார்வையிட உள்ளார். பின்னர் பிப்ரவரி 25-ந்தேதி, மார்செய்ல் நகருக்கு செல்லும் உபேந்திரா திவேதி, அங்கு பிரான்ஸ் ராணுவத்தின் மூன்றாவது படைப்பிரிவை பார்வையிட உள்ளார். அங்கு அவரிடம் இந்தியா-பிரான்ஸ் பயிற்சி ஒத்துழைப்பு மற்றும் பிரான்ஸ் ராணுவத்தின் நவீனமயமாக்கல் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 27-ந்தேதி, நெவே சாப்பெல் இந்திய போர் நினைவுச்சின்னத்திற்குச் சென்று, முதலாம் உலகப் போரில் பங்கேற்று வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு ராணுவ தலைமை தளபதி திவேதி மரியாதை செலுத்த உள்ளார்.

மூலக்கதை