ஜோஷ் இங்கிலிஸ் சிறப்பாக விளையாடினார் - ஜாஸ் பட்லர் பேட்டி

  தினத்தந்தி
ஜோஷ் இங்கிலிஸ் சிறப்பாக விளையாடினார்  ஜாஸ் பட்லர் பேட்டி

லாகூர்,சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 351 ரன் இலக்கை ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அபாரமாக பேட்டிங் செய்த ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்கள் எடுத்து அசத்தினார்.இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது ஒரு அருமையான ஆட்டமாக இருந்தது. இரு அணிகளும் சிறப்பாக விளையாடியது. நாங்கள் இன்று (நேற்று) நல்ல ஸ்கோரை அடித்தோம். ஜோஷ் இங்கிலிஸ் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற உதவியது. தொடக்கத்தில் நாங்கள் 350 ரன்களுக்கு மேல் குவித்தால் வெற்றி பெற முடியும் என்று நினைத்தோம். அதற்கேற்றவாறு நாங்கள் சரியான இலக்கையும் நிர்ணயித்தோம்.ஆனால், நாங்கள் பந்துவீசும் போது பனியின் தாக்கம் இருந்ததால் எங்களால் எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை. சூழ்நிலைகளில் என்ன நடந்தாலும், 350 ரன்களை சேஸிங் செய்வது எப்போதும் ஒரு அற்புதமான முயற்சி. எங்கள் அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அனைத்து வடிவங்களிலும் அவர் டாப் ஆர்டரில் சிறந்த வீரராக இருக்கிறார். இந்த வடிவத்தில் அவர் நம்பமுடியாத அளவிற்கு நிலையாக உள்ளார். அவர் விளையாடிய விதம் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், தோல்வியைத் தழுவியது ஏமாற்றமளிக்கிறது. அதேபோல் ஜோ ரூட் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் சிறப்பாக இருந்தனர் என்று நினைக்கிறேன். ஆனால் அலெக்ஸ் கேரி - ஜோஷ் இங்கிலிஸ் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களை அழுத்ததில் தள்ளினர். சில நேரங்களில் எதிரணிக்கு நாம் பாராட்டை கொடுத்து தான் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை