ரஷியா, உக்ரைன் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது; டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்,ரஷியா, உக்ரைன் இடையேயான போர் 1 ஆயிரத்து 97வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இதனிடையே, இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும், போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தடையாக இருப்பதாக டிரம்ப் கூறி வருகிறது. ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இந்த போருக்கு உக்ரைன்தான் காரணம் என்றும் டிரம்ப் விமர்சித்து வருகிறார். இதனால், உக்ரைன், அமெரிக்கா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த போரில் உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகளின் மொத்த மதிப்பு 180 பில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பித்தர அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்த உதவிக்கு ஈடாக உக்ரைனில் உள்ள மிகவும் அரிதான தாதுக்களை எடுத்துக்கொள்ளவும் அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, உக்ரைன் இடையே விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, உக்ரைனில் இருந்து ரஷிய படைகளை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அவர் வெள்ளைமாளிகையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது உக்ரைன், ரஷியா போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டிரம்ப், ரஷியா, உக்ரைன் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஐரோப்பிய அமைதிப்படையினரை உக்ரைனில் நிலைநிறுத்த ரஷிய அதிபர் புதின் சம்மதிப்பார் என நம்புகிறேன். ரஷியா, உக்ரைன் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. போர் இன்னும் ஒருவாரத்திற்கும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறேன். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் அமெரிக்காவுக்கு வருவார். உக்ரைனில் உள்ள அரியவகை தாதுக்களை எடுத்துக்கொள்ள அமெரிக்காவுக்கு அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் உக்ரைன் விரைவில் கையெழுத்திடும் என எதிபார்க்கிறேன்' என்றார்.
மூலக்கதை
