கொல்கத்தா அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன் - வெங்கடேஷ் ஐயர்

புதுடெல்லி,இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன. கொல்கத்தா அணியின் கேப்டனாக சீனியர் வீரரான அஜிங்யா ரகானா அல்லது இளம் அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.இதில் இளம் வீரரான வெங்கடேஷ் ஐயர் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டனாக தன்னை நியமித்தால், அணியை வழிநடத்த தயாராக உள்ளதாக வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கொல்கத்தா அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனக்கு தலைமை பண்பில் நம்பிக்கை இருக்கிறது. தலைவனாக அணியை வழிநடத்துவது மிகப்பெரிய பொறுப்பு. கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை.அணியின் கேப்டனாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன். கேப்டன் பொறுப்பை நிராகரிக்க எந்த ஒரு காரணமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதுவரை 50 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ள வெங்கடேஷ் ஐயர் 1,326 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
