தீங்கு விளைவிக்கும் என்றால் 'டீப் சீக் ' செயலியை பயன்படுத்த வேண்டாம் - டெல்லி ஐகோர்ட்டு

புதுடெல்லி, நொடிகளில் பல ஆயிரம் தரவுகளை கொட்டிக் கொடுக்கும் சீன ஏ.ஐ செயலியான 'டீப்சீக்' உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இதன்மூலம் மனிதனின் நுண்ணறிவு தேவைப்படும் பணிகளையும் கம்ப்யூட்டர்கள் செய்ய முடியும். எனவே செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த உலக நாடுகள் பலவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.இதன் தொடர்ச்சியாக சீனாவும் டீப்சீக் என்ற செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தியது. அறிமுகமான சில வாரங்களுக்குள்ளேயே உலகளவில் இது மிகவும் பிரபலமானது. இந்நிலையில் 'டீப்சீக்' செயலி இந்திய பயனாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதனை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு கடந்த பிப்ரவரி 12ம் தேதி டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வழக்கில் வழக்கறிஞர் ஒருவரை இணைக்க வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்ததோடு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 16ம் தேதி ஒத்திவைத்தது.இந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா அமர்வில் இன்று முறையிடப்பட்டது.அதற்கு நீதிபதிகள், "டீப்சீக்" செயலி பயனாளர்களுக்கு ஆபத்தை தரக்கூடும் என்றால், அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், மாறாக அதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளதா..? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியதோடு, அவசர வழக்காக விசாரிக்க கூடிய அளவிற்கு முகாந்திரம் இல்லை என்று கூறி அந்த மனுவை நிராகரிப்பதாக நீதிபதிகள் அமர்வில் தெரிவிக்கப்பட்டது.
மூலக்கதை
