சட்டவிரோதமாக சொத்து வாங்கிய வழக்கு; சமாஜ்வாடி முன்னாள் எம்.எல்.ஏ. ஜாமீனில் விடுதலை

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான அசம் கானின் மகன் அப்துல்லா அசம் கான். சுவார் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான அப்துல்லா அசம் கான் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியது தொடர்பான வழக்கில், அப்துல்லா அசம் கான் கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அப்துல்லா அசம் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் அப்துல்லா அசம் கானுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது. இருப்பினும் ஜாமீன் சரிபார்ப்பு தொடர்பான நடைமுறை சிக்கல்கள் காரணமாக அவரது விடுதலை தாமதமாகி வந்தது. இந்த நிலையில் அப்துல்லா அசம் கானை ஜாமீனில் விடுவிப்பதற்கான கோர்ட்டின் உத்தரவு அவர் அடைக்கப்பட்டுள்ள ஹர்டோய் சிறைக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து 17 மாதங்களுக்கு பிறகு நேற்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைக்கு முன்பு திரண்டு இருந்த அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் அப்துல்லா அசம் கானுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மூலக்கதை
