அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் தங்க அட்டை.. முதலீட்டாளர்களை ஈர்க்க டிரம்ப் புதிய திட்டம்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பணக்கார முதலீட்டாளர்களை ஈர்க்க, முதலீட்டாளர் விசாவுக்கு பதிலாக தங்க அட்டை (கோல்டு கார்டு) வழங்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருவாயை அதிகரிக்கவும், நிதி பற்றாக்குறையை சரி செய்யவும் இந்த புதிய சலுகையினை அவர் அறிவித்து இருக்கிறார். புதிதாக குடியேறும் முதலீட்டாளர்களுக்கு விசாவுக்கு பதிலாக 5 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 43 கோடி) தங்க அட்டை விசா விற்பனை செய்யப்படும் என்றும், இது குடியுரிமைக்கான பாதை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் பேசிய அவர், "இந்த விசாவை பெறும் பணக்காரர்கள் நம் நாட்டுக்கு வந்து வெற்றிகரமாக தொழில் செய்வார்கள், அவர்கள் நிறைய பணம் செலவழிப்பார்கள், நிறைய வரிகளை செலுத்துவார்கள். நிறைய பேரை வேலைக்கு அமர்த்துவார்கள். எனவே, இந்த நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறோம்" என்றார். முதலீட்டாளர்களுக்கான EB-5 விசாக்களுக்கு பதிலாக தங்க அட்டை இன்னும் இரண்டு வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று வர்த்தகத் துறை மந்திரி ஹோவர்ட் லுட்னிக் கூறினார். 'தங்க அட்டையானது உண்மையில் ஒரு கிரீன் கார்டு அல்லது நிரந்தர சட்டப்பூர்வ வசிப்பிட அட்டை ஆகும். இது முதலீட்டாளர்களுக்கான நுழைவு கட்டணத்தை அதிகரிக்கும். EB-5 திட்டத்தில் உள்ள மோசடி அபாயங்களை ஒழிக்கும். மற்ற கிரீன் கார்டுகளைப் போலவே, இது குடியுரிமைக்கான பாதையை உள்ளடக்கும்" என்றும் லுட்னிக் கூறினார்.
மூலக்கதை
