சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்த அணிகள்தான் முன்னேறும் - ஆஸி. முன்னாள் வீரர் கணிப்பு

மெல்போர்ன்,9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் தற்போது வரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் குரூப் ஏ-வில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான டேனியல் கிறிஸ்டியன் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆஸ்திரேலிய அணி தற்போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படவில்லை. ஆனாலும், ஐ.சி.சி தொடரின் போது எப்போதுமே ஆஸ்திரேலியா அணி பலம் வாய்ந்த அணியாக அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் எங்களது அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முக்கியமான இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஜாஸ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து பிரமாதமாக விளையாடியிருந்தார்கள். அந்த வகையில் இனிவரும் போட்டிகளிலும் எங்களது வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். ஹேசல்வுட், கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இல்லாமலும் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தற்போதைக்கு ஆஸ்திரேலியா விளையாடி வரும் ஆட்டத்தை பார்க்கும்போது நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தான் விளையாடும். இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
