சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித், கில் பங்கேற்பதில் சிக்கல்..? வெளியான தகவல்

துபாய், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இதனையடுத்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் வருகிற 2-ம் தேதி நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் கில் களமிறங்குவதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது தசைபிடிப்பு காரணமாக சிறிது நேரம் ஓய்வெடுத்த ரோகித் சர்மா, நேற்றைய பயிற்சியின்போது பேட்டிங் செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் அடுத்த போட்டியில் ஓய்வெடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மறுமுனையில் சுப்மன் கில்லுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் நேற்றைய பயிற்சியின்போது மைதானத்திற்கே வரவில்லை என்று தெரிய வந்துள்ளது. இது அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மூலக்கதை
