தேர்வுக்குழுவில் ஒருவருக்கு கூட கிரிக்கெட் தெரியாது - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடிய அப்ரிடி

இஸ்லாமாபாத், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தனது பிரிவில் (ஏ பிரிவு) கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் அந்த அணியை அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுவில் இடம்பெற்ற ஒருவருக்கு கூட கிரிக்கெட் தெரியாது என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "நான் சில நாட்களுக்கு முன்பு லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரை (மொஹ்சின் நக்வி) சந்தித்தேன். மைதானத்தை மேம்படுத்த அவர்செய்த முன்முயற்சிகள் அனைத்தும் நன்றாகவே இருந்தது, அவர் மேலும் கடாபி மைதானத்தை மெருகேற்ற விரும்புகிறார். ஆனால் அவர் என்னிடம் கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என்று கூறினார். உங்களுக்கு கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என்றால், கிரிக்கெட் பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். ஆனால் பாகிஸ்தான் தேர்வுக்குழுவில் தொடங்கி இயக்குநர்கள் வரை நாம் பார்க்கும் அத்தனை பேருக்கும் கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை, கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பை சரிசெய்ய முடியும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாவலர்கள் சரியாக இருந்தால், அணியும் முன்னேற்றமடையும்" என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்தார். முன்னதாக பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி.) தலைவராகப் பொறுப்பேற்றார். 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானின் முதல் ஐசிசி போட்டியான 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் பொறுப்பாளராக அவர் இருந்தார். இருப்பினும், அவரது தலைமையின் கீழ், பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான காலகட்டங்களில் ஒன்றைக் கண்டுள்ளது, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியிலும் குழு நிலைகளிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது. இந்த சூழலில்தான் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி , தற்போது நக்வி பற்றி ஒரு பெரிய கூற்றை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
