உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்..?

  தினத்தந்தி
உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்..?

புதுடெல்லி, சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியாகி இருக்கிறது. அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.மேலும் உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இதன்படி அசாமில் உள்ள பைர்னிஹாட், டெல்லி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர், நொய்டா ஆகிய 13 நகரங்கள் அதிக மாசுபட்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அசாமின் பைர்னிஹாட் நகரம் உலகின் மாசுபட்ட நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், உலகில் மாசுபட்ட தலைநகரங்களில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது.அதேநேரத்தில், உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் 2023-ல் 3வது இடத்தில் இருந்த இந்தியா, 2024ல் 5-வது இடத்திற்கு சென்றுள்ளது. இதன்படி உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.அமெரிக்காவின் மிகவும் மாசுபட்ட நகராக கலிபோர்னியா அடையாளம் காணப்பட்டுள்ளது. பிற மாசுபட்ட நகரங்களாக லாஸ் ஏஞ்சல்ஸ், ஆன்டாரியோ ஆகியவை உள்ளன. சியாட்டில், வாஷிங்டன் ஆகியவை தூய்மையான நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. உலகின் மிகவும் தூய்மையான பகுதியாக பியூர்டோ ரிகோவின் மயாகீஸ் இடம் பிடித்துள்ளது.இந்தியாவில் காற்று மாசுபாடு கடுமையான சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதனால், இந்தியர்களின் ஆயுள் காலம் 5.2 ஆண்டுகள் குறைகிறது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுவாசத்திலும் நச்சு கலந்து, உயிரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சுகிறது. நுரையீரல் தொற்று, இதய நோய், புற்றுநோய் என மரணத்தின் பல்வேறு வடிவங்களை இந்த நச்சுக்காற்று வழங்குவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும் சுகாதார அமைச்சக ஆலோசகருமான சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், "எங்களிடம் தரவுகள் உள்ளன. இப்போது நமக்குத் தேவை நடவடிக்கைதான். உயிரி எரிவாயுவை LPG உடன் மாற்றுவது போன்ற சில தீர்வுகள் எளிதானவை. இந்தியா ஏற்கெனவே இதற்கான திட்டத்தைக் கொண்டுள்ளது. ஆனால், கூடுதல் சிலிண்டர்களை மானியமாக வழங்க வேண்டும். தற்போது முதல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், ஏழைக் குடும்பங்கள், குறிப்பாக பெண்கள் அதிக மானியங்களைப் பெறுவது மிகவும் முக்கியம். இது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதோடு, வெளிப்புற காற்று மாசுபாட்டைக் குறைக்கும். பொது போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கும், நகரங்களில் சில கார்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் அரசு முன்வர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

மூலக்கதை