ஹோலி பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

  தினத்தந்தி
ஹோலி பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முதல் நாளில் மகா விஷ்ணுவின் பக்தனான பிரகலாதனை கொல்லும் முயற்சியில் அசுர குலத்தை சேர்ந்த ஹோலிகா நெருப்பில் எரிந்து மாண்டுபோனதை குறிக்கும் வகையில் ஹோலிகா தகனம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.அதன்படி, நேற்று ஹோலிகா தகனம் நிகழ்ச்சி வட மாநில மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மராட்டிய மாநிலம் வொர்லியில் ஹோலிகா உருவ பொம்மையை தீயிட்டு எரித்து இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடியை தூவி நடனமாடி மகிழ்ந்தனர். ஹோலி பணிடிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை ஒட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் வலைதளத்தில், "வண்ணங்களின் பண்டிகையான ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சிப் பண்டிகை ஒற்றுமை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை அளிக்கிறது. இந்த விழா இந்தியாவின் விலைமதிப்பற்ற கலாச்சார பாரம்பரியத்தையும் குறிக்கிறது. வாருங்கள், இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில், பாரதத் தாயின் அனைத்து குழந்தைகளின் வாழ்க்கையிலும் தொடர்ச்சியான முன்னேற்றம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் வண்ணங்களைக் கொண்டுவர நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், "உங்கள் அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும், இன்பமும் நிறைந்த இந்தப் புனிதப் பண்டிகை, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் சக்தியையும் ஊட்டுவதோடு, நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் நிறத்தை ஆழப்படுத்தட்டும் என்பது எங்கள் நம்பிக்கை" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை