தமிழக பட்ஜெட்டில் யாருக்கும் எதுவுமில்லை: புதிய திட்டங்கள் இல்லை - ராமதாஸ்

சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக் குறித்த பரப்புரை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு யாருக்கும் எதுவும் இல்லை என்ற எதார்த்தத்துடன் நிறைவடைந்திருக்கிறது. கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாணவர்களுக்கு இலவச கணினி போன்ற சில கவர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் கூட, அவை மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாக உள்ளன.2025&26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். திமுக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு நிதியமைச்சர் நீண்ட நேரம், அதாவது 2.40 மணி நேரம் உரையாற்றினார்; நிதிநிலை அறிக்கை ஆவணம் மொத்தம் 182 பக்கங்களைக் கொண்டிருந்தது என்றாலும் அதில் திட்டங்களைத் தான் காணவில்லை.1. ஐ.நா. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளின் அலுவல் மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்க்க இன்னும் 45 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்கான ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாகவும், கட்டாயப் பாடமாகவும் செயல்படுத்த எந்த அறிவிப்பையும் திமுக அரசு வெளியிடாதது ஏன்?2. தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போலவே மத்திய அரசை கைகாட்டி விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது சமூகநீதிக்கு திமுக அரசு இழைத்திருக்கும் பெரும் துரோகம் ஆகும்.3. பள்ளிக்கல்வித்துறை தான் மிகவும் முக்கியமானது ஆகும். அத்துறைக்கு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6%, அதாவது ரூ. 2.14 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், அதில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது ரூ.46,767 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தகாலங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு சராசரியாக ரூ.4000 & ரூ.5000 கோடி என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் ரூ.2725 கோடி தான் உயர்த்தப்பட்டுள்ளது.4. பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2562 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய நிதியும், ஆசிரியர்களும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?5. உயர்கல்வித்துறைக்கான நிதி ரூ.1543 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் அரசு கல்லூரிகளில் 15 ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசு கல்லூரிகளில் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.6. மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.1708 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை ஒரே ஓர் அரசு மருத்துவக்கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. வரும் ஆண்டிலும் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.7. மாதம் ரூ.1000 மகளிர் உதவி வழங்கும் திட்டத்தில் பல லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல மாதங்களாகக் கூறி வருகிறார். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அத்திட்டத்திற்கான நிதி ரூ.87 கோடி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி நிர்வாகச் செலவினங்களுக்கே சென்று விடும் நிலையில், புதிய பயனாளிகள் எங்கிருந்து சேர்க்கப்படுவார்கள்? என்பதற்கு தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.8. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், நடப்பாண்டில் அத்திட்டத்திற்கு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே நிதிநிலை அறிக்கையில் கூறப்படவில்லை.9. நீர்வளத்துறையின் சார்பில் சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்கான 1.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட 6&ஆம் நீர்த்தேக்கம் திருப்போரூர் அருகில் 4375 ஏக்கரில் அமைக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படாதது ஏன்?10. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைக்கும் திட்டம் மட்டும் தான் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.12. 2025&26ஆம் ஆண்டின் இறுதிக்குள் 40 ஆயிரம் பேருக்கு புதிய அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆண்டுத் திட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் ஆண்டுத் திட்டத்தை அறிவித்து விட்டாலும் கூட, எந்தப் பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை என்பது ஏமாற்று வேலை தான்.12. 20 லட்சம் மாணவர்களுக்கு மடி கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அடுத்த இரு ஆண்டுகளில் தான் வழங்கப்படுமாம். திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 20 லட்சம் பேருக்கு மடிகணினி வழங்குவது சாத்தியமில்லை; அந்த வகையில் இதுவும் சாத்தியமற்றதாகும்.13. சென்னை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவுபடுத்த அறிவிப்புகள் இல்லை. அவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது என்பதையே தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதுவும் மக்களை ஏமாற்றும் செயல் தான்.இன்னொருபுறம் தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை இருக்காது என்றும், ரூ.1000 கோடிக்கும் மேல் வருவாய் உபரி கிடைக்கும் என்றும் தமிழக அரசு கூறி வந்த நிலையில், ரூ.41,634.93 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில் நிலைமையை சமாளிக்க நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்க இருக்கிறது. இதனால் 2025&26ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் ரூ. 9 லட்சத்து 29,959 கோடியாக அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் ரூ.70,753 கோடி செலுத்த வேண்டியிருக்கும். நடப்பாண்டின் முடிவில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.25 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும். மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பயனளிக்காத, கடன்சுமையை மட்டுமே அதிகரிக்கக்கூடிய நிநிநிலை அறிக்கை ஆகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
