பயங்கரவாத சம்பவங்களுக்கு காரணமா.? - பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி, தங்கள் எல்லைப் பகுதிகளில் இந்தியா பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. .முன்னதாக அங்கு 2 நாட்களாக நடந்த மீட்பு நடவடிக்கையில் 21 பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 33 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், 4 ராணுவ வீரர்களும் பலியாகினர். உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த நடவடிக்கையில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டது.இந்த சூழலில் இந்த ரெயில் கடத்தல் தொடர்பாக நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஷகத் அலி கான், இந்த மீட்பு நடவடிக்கையின்போது பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்தார். தங்கள் மண்ணில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை நிறுத்துமாறு ஆப்கானிஸ்தானை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் கூறினார்.அப்போது பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை இந்தியா தூண்டி விடுவதாக கூறி வந்த பாகிஸ்தானின் கொள்கையில் மாற்றம் ஏதும் ஏற்பட்டு உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஷகத் அலி கான், இந்த கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை இந்தியா தூண்டி விடுவதாகவும் குற்றம் சாட்டினார். இந்தியா தனது அண்டை நாடுகளை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் சாடினார்.பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தானின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம். சர்வதேச பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது? என்பதை உலகறியும். தங்கள் சொத்த பிரச்சினைகள் மற்றும் தோல்விகளுக்கு அடுத்தவர்களை நோக்கி கை நீட்டுவதற்கு பதிலாக பாகிஸ்தான் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று ரந்திர் ஜெய்ஸ்வால் கூறினார்.
மூலக்கதை
