சட்டசபையில் செங்கோட்டையன் பேச வாய்ப்பு கேட்ட எடப்பாடி பழனிசாமி

சென்னை, தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜு இன்று பல்வேறு கேள்விகளை எழுப்பி தொழில்துறை, பள்ளிக் கல்வித்துறை, நிதித்துறை அமைச்சர்களிடம் பதில் பெற்றார்.முன்னதாக பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளி கட்டிடம் சேதம் அடைந்துள்ளன" என்று கூறினார்அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, "50 ஆண்டு காலம் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் புதிதாக, அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் முதல்-அமைச்சர் ஸ்டாலின், கடந்த ஆண்டு 6,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. உங்கள் ஆட்சியில் எவ்வளவு பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என கூறுங்கள்..?" என செல்லூர் ராஜுவிடம் அவர் கேள்வி எழுப்பினார்.இந்த விவாதத்தின் போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "அ.தி.மு.க. ஆட்சியில் 513 பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளனர், அதில் 300க்கும் அதிகமான பள்ளிகளில் உள்கட்டமைப்பு இல்லாமல் இருந்தது. அதையும் சேர்த்து நாங்கள் இன்று கட்டுகிறோம். தி.மு.க. ஆட்சியில் 7,600 வகுப்பறைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.இதனிடையே முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சரான செங்கோட்டையனிடம் பதிலளிக்குமாறு அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூற, அவர் அமைதியாகவே இருந்தார். முன்னதாக செங்கோட்டையன் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2017 முதல் 2021 வரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். அப்போது எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் இதற்கு பதிலளிப்பார் என்று கூறினார். உடனே எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் செங்கோட்டையன் பேச அனுமதிக்க வேண்டும் என்று சைகை மொழியில் கேட்டார். ஆனால் நேரம் இல்லை என்றும், எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நீங்கள் வேண்டுமென்றால் பேசலாம் என்றும் சபாநாயகர் கூறினார்.செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மன வருத்தம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று முதல் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் செங்கோட்டையன் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது தனி வழியில் வந்து, தனி வழியில் சென்ற செங்கோட்டையன் இன்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பேரவை உணவகத்தில் உணவு அருந்தச் சென்றார்.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியோடு மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட நிலையில் இன்று சட்டசபையில் செங்கோட்டையன் பேச அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தது அவர்கள் இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலக்கதை
