ஷர்துல் தாகூர் அபார பந்துவீச்சு.. லக்னோ அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்

  தினத்தந்தி
ஷர்துல் தாகூர் அபார பந்துவீச்சு.. லக்னோ அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்

ஐதராபாத், ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 7-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு இம்முறை தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா 6 ரன்களிலும், அடுத்து வந்த முந்தைய ஆட்டத்தின் ஹீரோ இஷான் கிஷன் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். இருவரையும் ஷர்துல் தாகூர் காலி செய்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன டிராவிஸ் ஹெட் சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் நிதிஷ் ரெட்டி 32 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அணியின் ரன்வேகம் சற்று மந்தமாகவே நகர்ந்தது. லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர்.இருப்பினும் இறுதி கட்டத்தில் அனிகேத் வர்மா வெறும் 13 பந்துகளில் 5 சிக்சர்கள் உட்பட 36 ரன்கள் அடித்தார். கேப்டன் கம்மின்சும் 4 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 18 ரன்கள் அடித்தார். இதனால் அணி வலுவான நிலையை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் அடித்துள்ளது. லக்னோ தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.இதனையடுத்து 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி லக்னோ களமிறங்க உள்ளது.

மூலக்கதை