காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

  தினத்தந்தி
காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்  எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை,எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சுகாதாரத்துறை இயக்குனரால் அனுப்பப்பட்ட 2715 சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை அனுமதிக்க கோரி இயக்குனரகத்தால் அனுப்பப்பட்டுள்ள முன்மொழிவை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முக்கியப் பொறுப்பு வகிக்கும், சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்கள் 100 சதவிகிதம் காலியாக இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இதனால் அரசின் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள், நடவடிக்கைகள் பலவீனமடைவதோடு, தொற்று நோய்களைத் தடுப்பதற்கான அரசின் முயற்சிகளும் பலவீனமடைகின்றன. மேலும், சுகாதாரத்துறை இயக்குனரால் முன்மொழியப்பட்ட 2715 பணியிடங்களை அனுமதிக்க கோரி அனுப்பப்பட்ட கோரிக்கை நிலுவையில் உள்ளது தமிழக அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தினை எஸ்டிபிஐ கட்சி ஆதரிப்பதோடு, தமிழக மக்களின் நலன் கருதி, இந்தக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், சுகாதாரத்துறை இயக்குனரகத்தின் முன்மொழிவை உடனே நிறைவேற்றவும் தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை