பெங்களூரு அணியில் அந்த 2 பேரை அமைதியாக வைத்தால் போதும்... - சி.எஸ்.கே பயிற்சியாளர் பேட்டி

  தினத்தந்தி
பெங்களூரு அணியில் அந்த 2 பேரை அமைதியாக வைத்தால் போதும்...  சி.எஸ்.கே பயிற்சியாளர் பேட்டி

சென்னை,18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. நடப்பு தொடரில் இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளன. அந்த வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் விரும்பும்.இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் கடந்த வருடம் ஆர்.சி.பி அணி தங்களுக்கு வித்தியாசமானப் போட்டியை கொடுத்ததாக சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். மேலும், விராட் கோலி மற்றும் படிதார் ஆகியோரை அமைதியாக வைத்திருந்தால் அது எங்களுக்கு வெற்றி பெற உதவும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,ஒரு போட்டியை வைத்து எதைப் பற்றியும் கருத்து சொல்ல முடியாது. கடந்த வருடம் ஆர்சிபி – சிஎஸ்கே போட்டி மிகவும் வித்தியாசமாக இருந்தது. இருப்பினும் நாங்கள் கடந்த கால செயல்பாடுகளைப் பார்க்க விரும்பவில்லை. அதே சமயம் பெங்களூரு அணியை பார்க்கும் போது விராட் கோலி அதன் பெரிய அங்கமாக இருக்கிறார். அவரையும் தாண்டி மற்ற அணிகளை போல பெங்களூருவும் தங்களது அணியில் நிறைய பலத்தைக் கொண்டுள்ளது. எனவே இம்முறை போட்டி இன்னும் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட போட்டியில் நாங்கள் விராட் கோலி மற்றும் படிதார் ஆகியோரை அமைதியாக வைத்திருந்தால் அது எங்களுக்கு வெற்றி பெற உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை