பேட்டிங் - பவுலிங் இரண்டிலும் சமநிலை வேண்டும்.. ஆனால் - ஷர்துல் தாகூர்

ஐதராபாத், நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர் 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷர்துல் தாகூர் ஆட்ட நாயகன் விருது வென்றார். அத்துடன் ஊதா நிற தொப்பியையும் கைப்பற்றினார்.இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஷர்துல் தாகூர் அளித்த பேட்டியில், "உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஏலத்தில் யாரும் வாங்காததால் இந்த வருட ஐ.பி.எல். தொடரில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. அதனால் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்திருந்தேன். ஆனால் ரஞ்சி கோப்பையில் விளையாடி கொண்டிருந்தபோது என்னை அழைத்த ஜாகீர் கான், 'நீங்கள் மாற்றுவீரராக லக்னோ அணிக்கு அழக்கப்படலாம். எனவே வேறு எந்த திட்டம் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம். மாற்றுவீரராக அழைக்கப்பட்டால் பிளேயிங் லெவனில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்' என்றார். ஏற்ற தாழ்வுகள் வாழ்க்கையின் ஒரு பகுதி. நான் எப்போதும் எனது திறமைகளை ஆதரித்துள்ளேன். ஹெட் மற்றும் அபிஷேக் எனது பந்துவீச்சை அடித்து ஆட விரும்பினார்கள். எனவே நான் அவர்களை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தேன். புதிய பந்து என்பது ஸ்விங் செய்யும்போது விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய ஒரு விஷயம். இன்றிரவு எனது வாய்ப்புகளை நான் பயன்படுத்திக் கொண்டேன். இதுபோன்ற போட்டிகள் பந்துவீச்சாளர்களுக்கு மிகக்குறைவாகவே கிடைக்கிறது. பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமநிலை வேண்டும் என்பதால் இது போன்ற பிட்ச் உருவாக்கப்பட வேண்டுமென கடந்த போட்டியிலேயே சொன்னேன். ஆனால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால் 240 - 250 ரன்கள் அடிப்பது பவுலர்களுக்கு அநீதியானது" என்று கூறினார்.
மூலக்கதை
