வரி விதிப்பில் இருந்து பின்வாங்கப்போவதில்லை - டிரம்ப் அதிரடி

வாஷிங்டன்அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதன்பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்துவதாக இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டவர்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்றினார். இதுபோலவே பொருளாதார நடவடிக்கைகளிலும் சீர்திருத்தம் என்ற பெயரில் பல மாற்றங்களை செய்தார். ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். இதற்காக பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் உள்ளிட்டவர்களை கொண்ட அரசாங்க செயல்திறன் துறை (டோஜ்) குழுவையும் உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.பரஸ்பர வரிவிதிப்பு, வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் உலக நாடுகள் மத்தியில் டிரம்புக்கு எதிரான மனநிலையை தூண்டி உள்ளது போல, சமூக பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் அமெரிக்கர்களும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதனால் டிரம்ப் மற்றும் எலான்மஸ்க் கூட்டணிக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வெடித்து உள்ளது.ஜனாதிபதி டிரம்பிற்கு எதிரான போராட்டத்தில் மன்ஹாட்டன் முதல் அலாஸ்காவின் ஆங்கரேஜ் வரை, பல மாகாண தலைநகரங்கள் உள்பட, நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது டிரம்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், ஏர் போர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கடுமையான வரிகளில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. சில நேரங்களில் எதையாவது சரிசெய்ய கசப்பு மருந்தை சாப்பிட்டுதான் ஆக வேண்டும். ஐரோப்பியா, ஆசியா என பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யத் துடிக்கிறார்கள். பல நாடுகளுடன் எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது மட்டுமே என்றார்.இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்கா வுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்ப தாக டிரம்பின் ஆலோசகர்கள் தெரிவித்து உள்ளனர்.
மூலக்கதை
