16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபர் மீது போக்சோ வழக்கு

கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் முருகன் என்ற அரவிந்த் (வயது26). இவருக்கும் 16 வயதுடைய ஒரு சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி 8 -ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஒரு வலை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் வேலைக்காக தினமும் நாகர்கோவிலுக்கு செல்வது வழக்கம்.இந்தநிலையில் சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு முருகன் அவரது வீட்டுக்கு வந்தார். அவர் சிறுமியிடம் நைசாக பேசி அந்த பகுதியில் உள்ள நூலக கட்டிடம் அருகே அழைத்து சென்று திருமண ஆசைக்காட்டி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டுக்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் முருகனை சந்தித்து அதுபற்றி கேட்டார். அப்போது முருகன் சிறுமியின் தாயை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் முருகன் மீது போக்சோ பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே முருகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். முருகன் மீது வெள்ளிச்சந்தை போலீசில் ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
