பூலாம்பாடி ஜல்லிக்கட்டு போட்டி: 45 பேர் காயம்

திருப்பூர், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியில் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக வாடிவாசல், மாடுபிடி வீரர்கள் தளம், பார்வையாளர்கள் மாடம் என அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து காலை 8 மணி அளவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ் குமார் ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பிரபாகரன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேரா, சப்-கலெக்டர் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினார்கள். அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். பெரம்பலூர் மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 632 காளைகள் களம் கண்டன. 332 வீரர்கள் கலந்து கொண்டு காளைகளின் திமிலை பிடித்து அடக்கினார்கள்.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சோபா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 45 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ஜல்லிக்கட்டு நடந்த பகுதியில் வெயில் கடுமையாக இருந்ததால் பார்வையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு வெள்ளரிக்காய், தர்பூசணி, நீர்மோர், குடிநீர் வினியோகிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பார்வையிட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.
மூலக்கதை
