கர்நாடகாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெலகாவி ஜிண்டால் இரும்பு தாது நிறுவனத்தில் இருந்து இரும்பு தாதுக்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று மராட்டிய மாநிலம் மிராஜ் நோக்கி நேற்று காலை புறப்பட்டது.அந்த ரெயில் பெலகாவி ரெயில் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் மிலிட்டரி மகாதேவ் கோவில் அருகே சென்றது. அந்த ரெயிலை ஒரு தண்டவாளத்தில் இருந்து மாற்று தண்டவாளத்தில் திருப்பி விடும் பணி நடந்தது. அப்போது ஏற்பட்ட குளறுபடியால் எதிர்பாராதவிதமாக சரக்கு ரெயில் தடம் புரண்டது. இதில் சரக்கு ரெயிலின் கடைசி 2 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன.இந்த சம்பவம் நடந்த சமயத்தில் பெங்களூரு-கோலாப்பூர் இடையே இயங்கும் ராணி சென்னம்மா ரெயில் பெலகாவி நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் சரக்கு ரெயில் விபத்து பற்றி அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு ராணி சென்னம்மாரெயிலை 8 கிலோ மீட்டர் தொலைவிலேயே அதிகாரிகள் நிறுத்தினர்.அதாவது தேசுரா ரெயில் நிலையத்தில் அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் விபத்துக்குள்ளான சரக்கு ரெயில் மீது, அந்த பயணிகள் ரெயில் மோதி அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்கும்.இதற்கிடையே சரக்கு ரெயில் தடம்புரண்டது பற்றி தகவல் அறிந்ததும் உப்பள்ளி தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் மீட்பு ரெயிலில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதலில் தடம் புரண்ட ரெயிலை தூக்கி நிறுத்தும் பணியிலும், கவிழ்ந்த பெட்டிகளை மீட்டு நிலை நிறுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். இந்த பணிகள் சுமார் 5 மணி நேரம் நடந்தது. அதன் பிறகு தடம் புரண்ட ரெயில் தூக்கி நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.இந்த சம்பவம் காரணமாக மொத்தம் 5 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. அதாவது பெங்களூரு-கோலாப்பூர் ராணி சென்னம்மா ரெயில், மும்பை-உப்பள்ளி தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில், மும்பை-பெங்களூரு சாளுக்கியா எக்ஸ்பிரஸ், கோவா-மிராஜ் பயணிகள் ரெயில், பெலகாவி-மைசூரு ரெயில் சேவைகள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. மீட்பு பணிகள் முடிந்த பிறகு அந்த ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.மேலும் பெலகாவி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 11 மணிக்கும், மைசூரு-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 11 மணிக்கும் புறப்பட்டு சென்றன.இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் வழங்கியது.
மூலக்கதை
