கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு

  தினத்தந்தி
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு

திண்டுக்கல்,கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கியுள்ளதை முன்னிட்டும், ஏரி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தவும், ஏரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதை உடனடியாக சரிசெய்யவும், பிளாஸ்டிக் குப்பைகள், மதுபாட்டில்களை ஏரியில் வீசி செல்வோரை கண்டுபிடிக்கும் விதமாகவும் நகராட்சி சார்பில் ஏரி பகுதியை சுற்றி 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் கூறியதாவது;கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நகராட்சி சார்பில் இரண்டு படகு இல்லங்கள் உள்ளன. ஏரியை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நடைபாதைகள் உள்ளன. இவற்றை கண்காணிப்பதற்கு 60 இடங்களில் ரூ.50 லட்சம் செலவில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடையும். ஏரியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பவர்கள், ஏரிக்கு உள்ளே தேவையற்ற குப்பைகளை வீசி எறிபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காகவும், குற்றச்சம்பவங்களை தடுக்கவும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் பதிவுகள் நகராட்சி அலுவலகத்தில் பார்வையிடும் வகையில் ஒளித்திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களின் பதிவுகளை காவல் துறையினரும் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.

மூலக்கதை