நீலகிரி: பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய கலெக்டர்

நீலகிரி,நீலகிரி மாவட்ட கலெக்டர் லடுமி பாவ்யா, இன்று காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை உதகை ரெயில் நிலைய முகப்பில் துவங்கி, சேரிங்கிராஸ் வழியாக அரசு தாவரவியல் பூங்கா வரை சுமார் 4 கி.மீ தூரம் நடந்தே சென்று பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் பணி மேற்கொண்டார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-நீலகிரி மாவட்டத்தில், இந்த நெகழி சேகரிக்கும் பணியானது, இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அரசு அலுவலகங்களில் தொடங்கி, அனைத்து பொதுமக்கள் கூடும் இடங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி - கல்லூரிகள், மாணவ - மாணவியர்கள் தங்கும் விடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் இடங்களிலும் இப்பணியானது நடைபெறுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அவர்கள், மாவட்ட வன அலுவலர் அவர்கள், ஊடகத்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இப்பணிகளில் ஈடுப்பட்டனர்.மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று நடைபெற்ற மாபெரும் நெகழி சேகரிப்பு பணியின் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு, நமது வீடு, பகுதி, ஊர், நகரம் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது, நமது ஒவ்வொருவரின் கடமை என்பது குறித்தும், அரசு தடை செய்துள்ள ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 'மீண்டும் மஞ்சப்பை" பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதாவது, உணவுப் பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாளிற்கு மாற்றாக அலுமினிய தகடு தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாளிற்கு மாற்றாக காகித சுருள்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் பயன்பாடு குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உதகை மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து வணிக வளாகங்கள், அனைத்து கடைகளின் முன்பும் குப்பை தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
மூலக்கதை
