உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல் - 9 பேர் உயிரிழப்பு

கீவ்,உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். ஆனால் அன்றைய தினத்திலும் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். இந்நிலையில், உக்ரைன்-ரஷியா இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே இன்று அதிகாலை ரஷிய ராணுவம் மாபெரும் ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 63 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் கீவ் நகரின் மீது நிகழ்த்தப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்று என இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்க கூடும் என்றும், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
