ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டம்: சென்னை அணியின் பிளேயிங் லெவனில் பிரெவிஸ்..?

சென்னை, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் தனது சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) சரண் அடைந்தது. 7-வது ஆட்டத்தில் லக்னோவை தோற்கடித்து ஒருவழியாக வெற்றிப் பாதைக்கு திரும்பியது. ஆனால் அந்த உத்வேகத்தை நீடிக்க முடியாமல் கடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் பணிந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் சென்னை அணிக்கு ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். இந்த இக்கட்டான சூழலில் சென்னை அணி இன்று ஐதராபாத்துடன் மோத உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான சென்னை அணியில் டெவால்ட் பிரெவிஸ் அறிமுக வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நாங்கள் பார்க்கும் விருப்பங்களில் பிரெவிஸ் ஒருவராக இருக்கிறார். தொடர் முழுவதும் எங்களுடன் இருந்த வீரர்களும் உள்ளனர். பிரெவிஸ் அணியில் ஒரு நல்ல சேர்க்கை. ஆனால் எங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் வீரர்களைக் கருத்தில் கொண்டு, சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும். மேலும் பிரெவிஸ் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
மூலக்கதை
