துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டார்களா? தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

  தினத்தந்தி
துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டார்களா? தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்  தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் ஊட்டி கவர்னர் மாளிகையில் 2 நாட்கள் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இந்த மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுக்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், துணை வேந்தர்களுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர், தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் கவர்னர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டியுள்ளார்.இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-துணை வேந்தர்களை அழைத்து கவர்னர் கூட்டம் நடத்துகிறார். ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாகவும், இதனால் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் கவர்னர் குற்றம் சாட்டி உள்ளார். கவர்னர் சொன்னது உண்மையா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.துணை வேந்தர்கள் ஏன் கூட்டத்தில் பங்கேற்க வரவில்லை. அவர்கள் மிரட்டப்பட்டார்களா? போலீசார், துணை வேந்தர்கள் வீட்டுக்கு சென்று தடுத்தார்களா? என்பதை அரசு விளக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தி.மு.க.வின் கிளை கழகங்களாக மாறி விடக்கூடாது.பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் நாடு, பிரதமரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் ஒருங்கிணைந்து இருப்பது ஆரோக்கியமான சூழ்நிலை ஆகும். பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரும் பேசியது ஆரோக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை