மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன்

  தினத்தந்தி
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன்

சென்னை, பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைத்து வரும் 2026 சட்டசபை தேர்தலை அதிமுக எதிர்கொள்ள உள்ளது. இந்தநிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன் தினம் இரவு, கட்சி எம்.எல்.ஏக்களுக்கு விருந்து கொடுத்தார். இந்த இரவு விருந்தில் அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் பங்கேற்றனர். சில முன்னாள் எம்.பிக்களும் பங்கேற்றனர். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அளித்த இந்த விருந்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. கடந்த சில வாரங்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை சொல்வதையே செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து டெல்லி சென்று அமித் ஷாவை தனியாக சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.அதிமுகவுடன் கூட்டணி அமைக்க செங்கோட்டையனை வைத்து பாஜக காய் நகர்த்துவதாகவும் பேசப்பட்டது. இதையடுத்து, சென்னை வந்த அமித்ஷா, அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்த நிலையில், செங்கோட்டையனையும் சமரசம் செய்து வைத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய செங்கோட்டையன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்ததாக கூறினார். அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி வழங்கும் விருந்தில் செங்கோட்டையன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், சட்டசபையில் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. நேற்று பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடந்தது. அப்போது பேசிய செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசினார். எடப்பாடியாரை வணங்கி உரையை ஆரம்பிப்பதாக செங்கோட்டையன் குறிப்பிட்டார்.இந்நிலையில் சென்னையில் நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். இதன்படி செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே இருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் கட்சிப் பணிகள், பூத் கமிட்டி குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை