பயங்கரவாதிகளுக்கு 30 ஆண்டுகளாக அடைக்கலம் - பாகிஸ்தான் மந்திரி பகிரங்க ஒப்புதல்

  தினத்தந்தி
பயங்கரவாதிகளுக்கு 30 ஆண்டுகளாக அடைக்கலம்  பாகிஸ்தான் மந்திரி பகிரங்க ஒப்புதல்

இஸ்லாமாபாத்,காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்தது. தொடர்ந்து பாகிஸ்தானும் தனது வான் எல்லையை மூடுவது உள்ளிட்ட அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது.பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து வருவதாக இந்தியா நீண்ட காலமாகவே குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் இதுவரை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு 30 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்து வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசீப் தெரிவித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் வழங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து கவாஜா ஆசீப்பிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், "இந்த மோசமான காரியத்தை அமெரிக்கா மட்டுமின்றி, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்காக கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்து வருகிறது. இந்த தவறால் நாங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.

மூலக்கதை