சூர்யவன்ஷியை அடுத்த ஐ.பி.எல் தொடரில் பார்க்க முடியாமலும் போகலாம் - சேவாக் கருத்து

புதுடெல்லி,நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருபவர் வைபவ் சூர்யவன்ஷி (வயது 14). ஐ.பி.எல். வரலாற்றில் இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தார். லக்னோவுக்கு எதிரான அறிமுக ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார்.அவர் லக்னோவுக்கு எதிராக 20 பந்தில் 34 ரன்னும், பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 12 பந்தில் 16 ரன்னும் எடுத்தார். இந்நிலையில், அதிரடியாக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷியை அடுத்த ஐ.பி.எல் தொடரில் நாம் பார்க்க முடியாமலும் போகலாம் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது, நன்றாக விளையாடினால் பாராட்டும், மோசமாக விளையாடினால் விமர்சனமும் வரும் என்பதை இளம் வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எந்த நிலையிலும் பணிவாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஓரிரு போட்டிகளிலேயே புகழ் பெறும் வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு அவர்கள் வேறு எதையுமே செய்ய மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் நட்சத்திர வீரர்கள் ஆக மாறி இருப்பார்கள். வைபவ் சூர்யவன்ஷி ஐ.பி.எல் தொடரில் 20 வருடங்கள் விளையாட முயற்சி செய்ய வேண்டும். விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் 19 வயதில் ஐ.பி.எல் தொடரில் விளையாட ஆரம்பித்தார். தற்போது அவர் 18-வது ஆண்டாக ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகிறார். விராட் கோலியை போல சூர்யவன்ஷி அதிக ஆண்டுகள் விளையாடுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முயற்சி செய்ய வேண்டும். சூர்யவன்ஷி இந்த ஐ.பி.எல் தொடரில் மகிழ்ச்சியாக இருப்பார் ஏனென்றால் அவர் இப்பொழுது கோடீஸ்வரன். அவருக்கு ஒரு சிறந்த அறிமுகம் கிடைத்தது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். ஆனால், அவரை அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் நாம் பார்க்க முடியாமலும் போகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
