பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்டவர் மீது வழக்கு

  தினத்தந்தி
பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்டவர் மீது வழக்கு

மங்களூரு, காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை ஆதரித்து தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு கோனஜேவை சேர்ந்த ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதாவது 'நிச்சு மங்களூரு' என்ற முகநூல் பக்கத்தில், 2023-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் பால்கரில் நடந்த சம்பவத்தின் எதிர்வினையாக பஹல்காமில் இந்த கொலை நடந்திருக்கலாம். பால்கரில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சேத்தன் சிங் பகிரங்கமாக தண்டிக்கப்படவில்லை. இந்த பால்கர் சம்பவத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பஹல்காம் தாக்குதல் நடந்துள்ளது. இந்த படுகொலை மதத்தின் அடிப்படையில் நடந்துள்ளது என பதிவிடப்பட்டிருந்தது.இந்த பதிவு வைரலான நிலையில், உல்லாலை சேர்ந்த சதீஸ் என்பவர், இதுபற்றி கோனஜே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்ட நபர் மீது பி.என்.எஸ். 192 (கலவரத்தை தூண்டுதல்), 353 (1) (தவறான தகவலை கூறி வதந்தியை பரப்புதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் முகநூலில் பதிவை வெளியிட்ட நபரை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மூலக்கதை