புகைபிடிக்க வயது வரம்பை உயர்த்தியது இந்தோனீசியா
இந்தோனீசிய அரசாங்கம், சுகாதார விதிமுறைகளில் தொடர்ச்சியாக செய்த மாற்றங்களின் ஒரு பகுதியாக, சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18இல் இருந்து 21 ஆக உயர்த்தியுள்ளது.270 மில்லியன் பேர் வசிக்கும் நாடான இந்தோனீசியா, புகையிலை உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்றாகும். உலகச் சுகாதார நிறுவனம் 2021ல் நடத்திய ஆய்வில் சுமார் 70 மில்லியன் பேர் அங்குப் புகைபிடிப்பவர்களாக உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.இந்தோனீசிய சுகாதார அமைச்சு 2023ல் நடத்திய ஆய்வில், நாட்டில் புகைபிடிப்பவர்களில் 7.4 விழுக்காட்டினர் 10 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் 15 முதல் 19 வயது வரையிலானோர் அதிக அளவு புகைபிடிப்பவர்கள் என்றும் கூறியது.கடந்த வாரம் அதிபர் ஜோக்கோ விடோடோ கையெழுத்திட்ட அரசாங்கச் சட்டத்தில், இந்தோனீசியாவில் சிகரெட் வாங்க விரும்புவோரின் குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தியது. அத்துடன், உள்ளூர் சாலையோரக் கடைகளில் மலிவான சிகரெட்டை விற்பனை செய்வதற்கும் தடை விதித்தது. இந்த விதிமுறை, புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதையும் சிறுவயதில் புகைத்தலைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் சிகரெட் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு அங்கு உடனடியாக அமலுக்கு வந்தது.