கடவுசீட்டு பெறுவதில் நிலவும் சிரமம் - உடனடி தீர்வை வழங்குவரா ஜனாதிபதி ரணில்? - லங்காசிறி நியூஸ்
சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் தாமதங்களை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளார்.வெற்று கடவுச்சீட்டுகள் குறைவாக இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவது மட்டுப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள கட்டுப்பாட்டாளர் நாயகம், விண்ணப்பதாரர்களின் அவசர தேவைகள் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.அதனால் கடவுசீட்டு பெறுவதில் சிரமம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இந்நிலையில் அதற்கு உடனடி தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் தாமதங்களை நிவர்த்தி செய்யலாம். டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் பிரச்சினையைத் தீர்க்கலாம் என கூறியுள்ளார்.தொழில் வல்லுநர்கள் மன்றத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Ask Me Anything” சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய விக்ரமசிங்க, “இந்த நாட்டில் பாஸ்போர்ட்டுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் கைவிடப்படாது” என்று வலியுறுத்தினார்.மேலும், டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை முன்னுரிமை என்றும், தனது தலைமையின் கீழ் தொடரும் என்றும் அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் இலங்கையர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த விக்கிரமசிங்க, தொழிலாளர் துறையையும் நவீனமயமாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “தொழிலாளர் துறையில் டிஜிட்டல் மயமாக்கல் தொடங்கப்பட வேண்டும். அனைத்து துறைகளிலும் செயல்படுத்த உள்ளோம்,'' என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.