தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க கடலோரங்களில் பயிற்சி
கல்பாக்கம்: கடலோரப் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் கல்பாக்கம் மற்றும் சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட கடலோர கிராமப் பகுதிகளில் ‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அவர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.கடல்வழியாக தீவிரவாதிகள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடலோரப் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து கடல் பாதுகாப்பு ஒத்திகையை செப்டம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் நடத்தத் திட்டமிட்டனர். ஒத்திகையின் முதல்நாளான இன்று (செப்டம்பர் 4), செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமப் பகுதிகளில் உள் கடற்கரையில் தீவிர சுற்றுக்காவல் மற்றும் சோதனைகளில் அந்தப் படையினர் ஈடுபட்டனர். மேலும், அனைத்துலகச் சுற்றுலாத்தலமான மாமல்லபுரம், சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள கல்பாக்கம் பகுதிக்குச் செல்லும் சாலையில் சதுரங்கப்பட்டினம் பகுதி காவல்துறை அதிகாரிகள் வாகனங்களைச் சோதனை செய்தனர். கல்பாக்கம் உள்பட கடலோர கிராமப்பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, தீவிரவாதிகள் சிலர் கடல் வழியாக ஊடுருவுவதும் அவர்களைப் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் விரைந்து சென்று பிடிப்பதும் பாவனைப் பயிற்சியாக செய்து காண்பிக்கப்பட்டன.