குறைவான கரிம வெளியேற்றத் தொழில்நுட்பத்துக்குப் பரிசு பெற்ற பேராசிரியர்

  தமிழ் முரசு
குறைவான கரிம வெளியேற்றத் தொழில்நுட்பத்துக்குப் பரிசு பெற்ற பேராசிரியர்

லண்டன்: சென்னையில் பிறந்த அமெரிக்காவாழ் இந்தியரான மின்துறைப் பொறியாளருக்கு 2024ஆம் ஆண்டுக்கான மில்லெனியம் தொழில்நுட்பப் பரிசாக ஒரு மில்லியன் யூரோ (1.4 மில்லியன் வெள்ளி) அறிவிக்கப்பட்டுள்ளது.அவரது புத்தாக்கக் கண்டுபிடிப்பு உலகெங்கும் மின்சார, பெட்ரோல் பயன்பாட்டை மிகப் பெரிய அளவில் குறைக்க உதவக்கூடியது.76 வயதாகும் பன்ட்வால் ஜயந்த் பாலிகா, வட கேரொலினா மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற கௌரவப் பேராசிரியர் ஆவார்.தமது வெற்றிக்கு, சென்னையில் உள்ள ‘ஐஐடி’ கல்விக்கழகத்தில் தாம் கற்ற பாடங்களும், பெற்ற கடினமான பயிற்சிகளுமே காரணம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் அவர் கூறினார்.புதன்கிழமை (செப்டம்பர் 4) அவரது ‘ஐஜிபிடி’ எனப்படும் கண்டுபிடிப்புக்கும் அதன் உருவாக்கம், வர்த்தகமயமாக்கலுக்கும் இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது. பகுதி மின்கடத்திக்கான மின்னிணைப்புக் கட்டுப்பாட்டுக் கருவியை அவர் கண்டுபிடித்தார். அது குளிரூட்டிகள் முதல் குளிர்பதனப் பெட்டி, எரிவாயு அல்லது மின்சாரத்தில் இயங்கும் கார்கள் வரையிலான நூற்றுக்கணக்கான நவீன சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.1980களில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஐஜிபிடி’, கடந்த 30 ஆண்டுகளில் உலகெங்கும் 82 கிகாடன் ( 82 டிரில்லியன் கிலோகிராம்) கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவியுள்ளது.மில்லியன்கணக்கானோருக்குப் பயனளிக்கும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்கு ஃபின்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்பக் கல்விக் கழகம் இந்தப் பரிசை வழங்குகிறது.2004ஆம் ஆண்டு முதன்முறையாக வழங்கப்பட்ட இப்பரிசை இணையத்தைத் தோற்றுவித்த டிம் பெர்னர்ஸ்-லீ பெற்றுக்கொண்டார்.திரு பாலிகா, சென்னையில் பிறந்தவர். 10 வயது வரை டெல்லியில் வசித்த அவர், பிறகு பெங்களூரில் பள்ளிப் படிப்பையும் சென்னையின் ‘ஐஐடி மெட்ராசில்’ கல்லூரிக் கல்வியையும் முடித்தார்.இவரது தந்தை பன்ட்வால் விட்டல் பாலிகா, சுதந்திர இந்தியாவின் ‘ஆல் இந்தியா ரேடியோ’ வானொலியின் முதல் தலைமைப் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.ஓய்வுபெற்ற கௌரவப் பேராசிரியர் பன்ட்வால் ஜயந்த் பாலிகாவிற்கு அக்டோபர் 30ஆம் தேதி ஃபின்லாந்தில் நடைபெறும் விருதளிப்பு நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் பரிசை வழங்குவார்.

மூலக்கதை