தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆட்சிக்கு வர முடியும் - செல்லூர் ராஜு

  தினத்தந்தி
தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆட்சிக்கு வர முடியும்  செல்லூர் ராஜு

மதுரை,முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜு, மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வலிமையான ஒரு இயக்கமாக தேர்தலை சந்திக்கும். அ.தி.மு.க. மகா சமுத்திரம் போன்றது. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். வேறு யாரையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை. பாரதிய ஜனதாவை பொருத்தவரை அதன் மதவாதத்தை அ.தி.மு.க. ஒரு போதும் ஏற்கவில்லை. எங்களை பொறுத்தவரை கூட்டணி தேவையில்லை.தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே தி.மு.க.வின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. தி.மு.க. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் தொடர்ந்து மறுமுறை ஆட்சிக்கு வராது. இதுதான் வரலாறு. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விட பல மடங்கு திறமை கொண்டவராக எடப்பாடியாரை மக்கள் பார்க்கிறார்கள். எனவே வருகிற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும். மீண்டும் எடப்பாடியார் முதல்-அமைச்சராக வருவார்.தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் வரும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்க முடியும். கூட்டணி ஆட்சி என்பது தமிழக மக்களால் விரும்பத்தகாத ஒன்றாகும். கூட்டணி ஆட்சி அமைந்த மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலைமை என்னவாக இருக்கிறது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை."இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை