பும்ரா, ஷமி இல்லை... இந்திய அணியில் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம் - ஆஸ்திரேலிய வீரர்

  தினத்தந்தி
பும்ரா, ஷமி இல்லை... இந்திய அணியில் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம்  ஆஸ்திரேலிய வீரர்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த தொடர் குறித்து பல வீரர்களும் தங்களது கருத்துகளை கூறி வரும் வேளையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜாவும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், "இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி எப்பொழுதுமே மிக சுவாரசியமாக நடைபெறும். இம்முறை இந்திய அணிக்கு எதிராக நிச்சயம் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி விளையாட விரும்புகிறோம். அதோடு இம்முறை இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்ற விரும்புகிறோம். இந்திய அணியில் அஸ்வின் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவர் எப்பொழுதுமே ஒரு வியூகத்துடன் இருக்கும் திறன் உடையவர். எல்லா போட்டியிலும் ஒவ்வொரு திட்டத்துடன் அவர் களத்திற்கு வருவார். மேலும் அந்த போட்டியில் எவ்வாறு எதிரணி வீரர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதை கண்டுபிடித்து செயல்படுவார். அவருடைய கிரிக்கெட் மூளையை நான் மிகவும் மதிக்கிறேன். அவருக்கு எதிராக எப்பொழுது விளையாடினாலும் அது அருமையாக இருக்கும். அந்த சவாலுக்காக நான் காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மூலக்கதை