மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது எப்போது..? - முகமது ஷமி பதில்
பெங்களூரு, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகள் என மூன்று வகையான அணியிலும் இடம் பிடித்து விளையாடி உள்ளார். இவர் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக அதன் பின் எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. தற்போது குணமடைந்து வரும் அவர் எதிர்வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற பேச்சுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் என்னதான் வெளியே இந்தியாவை வீழ்த்துவோம் என்று சொன்னாலும் உண்மையில் ஆஸ்திரேலியா கொஞ்சம் கவலையுடன் இருக்கும் என்று இந்திய வீரர் முகமது ஷமி கூறியுள்ளார். அத்துடன் இம்முறையும் அனுபவம் மற்றும் திறமையான வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் வெல்லும் என்று ஷமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் காயத்திலிருந்து 100% முழுமையாக குணமடையாத வரை கம்பேக் கொடுக்கப் போவதில்லை என்றும் ஷமி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் தொடரை வெல்பவர்களாக இருக்கிறோம். அதற்காக ஆஸ்திரேலியா கவலைப்படுவார்கள். முடிந்தளவுக்கு நான் மீண்டும் சீக்கிரமாக விளையாட முயற்சித்து வருகிறேன். ஏனெனில் நான் நீண்ட காலமாக விளையாடவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் கம்பேக் கொடுக்கும்போது என்னுடைய மனதில் சந்தேகம் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். வலுவாக நான் திரும்பி வரும்போது மீண்டும் காயமடைவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். எனவே வங்காளதேசம், நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலியா என எந்தத் தொடரில் கம்பேக் கொடுக்கப் போகிறேன் என்பது முக்கியமில்லை. இப்போதே நான் பந்து வீச துவங்கி விட்டேன். ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. 100% முழுமையாக குணமடைந்து விட்டேன் என்று நான் உணராத வரை எந்த பார்மட் அல்லது எதிரணி எதுவாக இருந்தாலும் நான் கம்பேக் கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒருவேளை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமெனில் நான் அதை செய்வேன்" என்று கூறினார்.