சென்னையில் 1,300 விநாயகர் சிலைகள் கரைப்பு; 16,500 காவலர்கள் பாதுகாப்பு
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ஆம் தேதி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரம்மாண்ட ஊர்வலம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்றது. இந்த ஊர்வலத்திலும் சிலைகளைக் கரைக்கும்போதும் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுப்பதற்காக, சென்னை மாநகர் முழுவதும் 16,500 காவலர்களும் 2,000க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னையில் பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூசைகள் செய்யப்பட்ட நிலையில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் 1,300 சிலைகள் 17 வழித்தடங்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. பெரிய விநாயகர் சிலைகளைக் கடலில் கரைப்பதற்காக ராட்சத பாரந்தூக்கி, படகுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.மெரினா கடற்கரைப் பகுதி முழுவதும் நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களும் மீனவர்களும் சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். மெரினா கடற்கரை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.