‘இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பிணைக்கைதிகள் உயிரிழந்திருக்கலாம்’

  தமிழ் முரசு
‘இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பிணைக்கைதிகள் உயிரிழந்திருக்கலாம்’

ஜெருசலம்: ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவரைக் குறிவைத்து 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பிணைக்கைதிகள் மாண்டிருக்கக்கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் செப்டம்பர் 15ஆம் தேதியன்று தெரிவித்தது.ஹமாஸ் அமைப்பின் தலைவர் திரு யஹ்யா சின்வார் உட்பட மற்ற மூத்த அதிகாரிகள் இருக்கும் இடங்களில் அவர்களைச் சுற்றி பிணைக்கைதிகள் சிறை வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க, இஸ்‌ரேலிய அதிகாரிகள் கூறினர்.அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் பிணைக்கைதிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் ஹமாஸ் அமைப்பு வேண்டுமென்றே இந்த உத்தியைக் கடைப்பிடிப்பதாகவும் நம்பப்படுகிறது.2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிணைக்கைதிகளான கார்ப்பரல் நிக் பைசர், சார்ஜெண்ட் ரோன் ஷர்மன், திரு எலியா டொலிடானோ ஆகியோர் உயிரிழந்தனர்.ஹமாஸ் அமைப்பின் வடகாஸா ராணுவப் பிரிவின் தளபதியான அகமது அல் கண்டூரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டபோது அவர்கள் மாண்டதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.ஆனால் இதை உறுதிப்படுத்துவது சாத்தியமில்லை என்று இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்தது.மாண்டோர் குடும்பத்துக்கு இஸ்‌ரேலிய ராணுவம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது.

மூலக்கதை