தென்கிழக்கு ஆசியாவில் குவியும் நிதி

  தமிழ் முரசு
தென்கிழக்கு ஆசியாவில் குவியும் நிதி

மும்பை: அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிக் குறைப்பும் கவர்ச்சிகரமான சொத்து மதிப்பீடுகளும் உலகளாவிய நிதி முதலீடுகளின் பார்வையை தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சொத்துகள் மீது திருப்பி உள்ளன.இவ்விரண்டு அம்சங்களும் மிகையான வருவாய்க்கு உறுதி அளிக்கக்கூடியவை என்பதால் அந்த நாடுகளில் நிதி குவியும் சூழல் உள்ளது.நிதி நிர்வாகிகள் தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா போன்ற நாடுகளில் கடந்த இரு மாதங்களாக பங்குப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகளை அதிகரித்து உள்ளனர்.அந்தப் போக்கு, இந்தக் காலாண்டில் உருவெடுத்திருக்கும் பங்குச் சந்தைகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாணய மதிப்பை உயர்த்த கைகொடுத்து உள்ளது. மேலும், தங்களுக்கு இணையான இதர நாடுகளின் பங்குச் சந்தைகளின் வளர்ச்சி விகிதத்தை இந்த வட்டார நாடுகளின் பங்குகள் எளிதாக மிஞ்சவும் அது உதவி உள்ளது. வட்டி விகிதக் குறைப்பின் தாக்கங்களை எதிர்கொள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகள் ஏற்கெனவே தயாராகிவிட்டன. பிலிப்பீன்ஸ் தனது நிதிக் கொள்கையை ஆகஸ்ட்டில் தளர்த்தியது. இந்தோனீசியாவும் இந்த வாரம் அதுபோன்றதொரு நடவடிக்கையில் இறங்க உள்ளது.இயல்பான வட்டி விகிதங்கள் அல்லது பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்படும் கடன் செலவுகள் இந்த வட்டாரத்தில் வரலாறு காணாத உயர்மட்டத்தில் உள்ளதால் நிதிக் கொள்கையைத் தளர்த்துவதற்கான கூடுதல் வாய்ப்பு தற்போது உருவாகி உள்ளதாக புளூம்பெர்க் செய்தி கூறுகிறது.

மூலக்கதை