‘பயத்தில் நடுங்கினோம்’: மீன்பிடித்த நண்பர்களுக்கு மிக அருகில் புலி

  தமிழ் முரசு
‘பயத்தில் நடுங்கினோம்’: மீன்பிடித்த நண்பர்களுக்கு மிக அருகில் புலி

ஜோகூர் பாரு: ஜோகூரில் மலேசிய ஆடவர்கள் இருவருக்கு அமைதியான ஒன்றாக இருந்திருக்க வேண்டிய மீன்பிடிப் பயணம், அவர்களைப் பதைபதைக்க வைத்துவிட்டது.அவர்கள் இருந்த இடத்தில் காணப்பட்ட புலி ஒன்று அவர்களை நெருங்கியதே இதற்குக் காரணம். அந்தச் சம்பவத்தைக் காணொளியாக பதிவுசெய்த நஸ்ரி இஸ்கந்தர், 31, தம் டிக்டாக் பக்கத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி அதனைப் பதிவேற்றம் செய்தார். திங்கட்கிழமை (செப்டம்பர் 16) நிலவரப்படி, அக்காணொளி 2.9 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.ஆடையில் பொருத்தப்பட்டிருக்கும் புகைப்படக் கருவியை அணிந்திருந்த நஸ்ரி, ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய நண்பர் அஸ்மிர் மொக்ரி, 35, உதவிக்கு அழைத்தபோது நஸ்ரி திடுகிட்டுப் போனார். அஸ்மிர் பயத்தில் நடுங்குவதைக் கண்ட நஸ்ரி, பதற வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொண்டார். அங்கு புலி ஒன்று அஸ்மிரை அணுகுவதைக் கண்ட நஸ்ரி, குர்ஆனில் இருந்து சில வசனங்களை ஓதத் தொடங்கினார். தங்களைத் தாக்காமல் அந்தப் புலி அங்கிருந்து சென்றுவிட வேண்டி துஆ ஒன்றை அவர் ஓதினார். பயத்தில் உறைந்துபோன இருவரும், தரையிலிருந்த பை ஒன்றின்மீது அந்தப் புலி அதன் கவனத்தைத் திசைதிருப்பியதைக் கண்டனர். அந்தப் பையை வாயால் கவ்விய அது, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. “அதனிடமிருந்து நீ நகர்ந்தால் அது பின்தொடருமா?” என்று நஸ்ரி கேட்க, அந்தப் புலியிடமிருந்து அஸ்மிர் மெல்ல நகர்ந்துச் சென்றார். பின்னர், இரு நண்பர்களும் மரத்தின் மேலே ஏறி கிளையில் அமர்ந்திருப்பதை அந்தக் காணொளி காட்டுகிறது. “லேசாக எடுத்துக்கொள், நண்பா! நாம் உதவிக்காக காத்திருக்கிறோம்,” என்று சிரித்தவாறு அஸ்மிர் கூறினார். தரையில் கிடந்த பையை அந்தப் புலி எடுத்தவுடன், அவர்களை விட்டு சற்று தூரமாகச் சென்று பையுடன் தரையில் படுத்துக்கொண்டதாக நஸ்ரி சொன்னார். “நம் நண்பர் விரைவில் இங்கு வந்துவிடுவார். அதற்கிடையே, நாம் இங்கு சற்று களைப்பாறுவோம்,” என்றார் அவர். தாங்கள் எதிர்கொண்ட சம்பவம் ‘மிகவும் ஆபத்தானது’ என்று குறிப்பிட்ட நஸ்ரி, மீன்பிடிக்கும்போது தங்களைச் சுற்றியுள்ள பகுதியை ஆய்வு செய்து கவனத்துடன் இருக்கும்படி மற்றவர்களை அறிவுறுத்தியுள்ளார்.இச்சம்பவம் ஜோகூரின் மெர்சிங் மாவட்டம், ஃபெல்டா நிதார் 2 செம்பனை எண்ணெய்த் தோட்டம் அருகே நிகழ்ந்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மூலக்கதை