கேரளாவில் நிபா தொற்றால் 24 வயது ஆடவர் உயிரிழப்பு

  தமிழ் முரசு
கேரளாவில் நிபா தொற்றால் 24 வயது ஆடவர் உயிரிழப்பு

கேரளா: இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரத்தைச் சேர்ந்த 24 வயது ஆடவர் நிபா கிருமித்தொற்றால் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15), புனேயில் உள்ள தேசியக் கிருமியியல் கழகம் இத்தகவலை உறுதிப்படுத்தியதாக கேரள மாநிலச் சுகாதாரத் துறை கூறியது. மூளையில் வீக்கம் ஏற்பட்டதற்கான அறிகுறிகளுடன் செப்டம்பர் 9ஆம் தேதி அந்த இளையர் மாண்டதாகக் கூறப்பட்டது.முன்னதாக, கோழிக்கோடு அரசாங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு நிபா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. பின்னர் புனே ஆய்வகம் அதை உறுதிசெய்ததாக மாநிலச் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.கடந்த ஜூலை மாதம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் நிபா கிருமித்தொற்றால் மாண்டான். அதையடுத்து அந்த மாவட்டத்தில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன. அதன் பின்னர் இதுவரை யாருக்கும் நிபா கிருமித்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.அண்மைய கிருமித்தொற்று குறித்த தகவல் வெளியானதும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார்.“ஞாயிற்றுக்கிழமை இரவே சுகாதாரத் துறை அதிகாரிகளின் அவசரக் கூட்டம் இடம்பெற்றது. இதன் தொடர்பில் 16 குழுக்களை அமைத்துள்ளோம். மாண்ட இளையர் பெங்களூரில் படித்து வந்தார். அவருடன் 151 பேர் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்,” என்றார் அவர்.மாண்ட இளையர் சிகிச்சை நாடி நான்கு தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றதாகவும் நண்பர்களுடன் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்ததாகவும் அமைச்சர் கூறினார்.“அதிக அபாயத்தை எதிர்நோக்கும் பிரிவினருக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட அறிகுறிகள் காணப்பட்ட ஐவரிடம் பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாண்டவருடன் தொடர்பிலிருந்தோரை அடையாளம் காணும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. கிருமிப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் குறிப்பிட்டார்.கேரளாவில் நிபா கிருமியால் 2018ஆம் ஆண்டு 17 பேரும், 2021ல் ஒருவரும், 2023ல் இருவரும் உயிரிழந்துவிட்டனர். இந்த ஆண்டு மாண்ட இருவரையும் சேர்த்து நிபா கிருமியால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22ஆகப் பதிவாகியுள்ளது.

மூலக்கதை